ஜாமக்காரரின் தசமபாக வழக்கு ஒருதலைப்பட்சமாகத் தெரிந்ததால்..,

தசமபாக வழக்கு 004
----------------------------

அரசு வக்கீல் : அப்படியிருக்க பொதுமக்களை தசமபாகம் கொடுக்கும்படி நீங்கள் போதிப்பது ஏமாற்று வேலையல்லவா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : பொறுங்கள் வக்கீல் சார்,

மத்தேயு 5 : 20-ல் இயேசு பொதுமக்களைப் பார்த்துச் சொன்னார் : வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் (விசுவாசத்திலும்) உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருப்பதால், ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிற யாவரும் தசமபாகம் செலுத்தி வந்திருக்கிறார்கள். இதில்,

வேதபாரகர் பரிசேயர் என்ற பாகுபாடு கிடையாது. இந்தப் பழக்கம் தொன்றுதொட்டு நடைமுறையில் வந்திருக்கிறது என்பதற்கு இன்றும் ஆதாரங்கள்வேதத்திலே உள்ளன.
 

அரசு வக்கீல் :புதிய ஏற்பாட்டில் தசமபாகம் வாங்கினார்கள் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமானதல்ல. ஏதோ ஓரிடத்தில் எழுதப்பட்டுள்ளதை வைத்து முடிவு கட்டிவிட முடியாது.

பாஸ்டர் ஜோன்ஸ் : அரசு வக்கீல் சார்... நீங்கள் கோர்ட்டுக்கு வரும்போது எப்படி வந்தீர்கள் :

அரசு வக்கீல் : இதென்ன புதிய கேள்வி...

பாஸ்டர் ஜோன்ஸ் : சொல்லுங்களேன்...

அரசு வக்கீல் : காரில் வந்தேன்.

பாஸ்டர் ஜோன்ஸ் : சாலையின் இடதுபுறம் வந்தீர்களா வலதுபுறம் வந்தீர்களா?

அரசு வக்கீல் : இடப்புறம்தான்... எனக்கு சாலைவிதிகள் தெரியாதா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : நன்றிசார். யார் உங்களுக்கு அந்த சாலைவிதிகளைச் சொல்லிக் கொடுத்தது?

அரசு வக்கீல் : நான் சிறுவயதிலேயே படித்திருக்கிறேன். அப்படியே கைக்கொண்டும் வருகிறேன்.

பாஸ்டர் ஜோன்ஸ் : கனம் நீதிபதியவர்களே, கோர்ட்டார் அவர்களே. நமது அரசு வக்கீலுக்கு சுமார் 50 வயதிருக்கலாம். சிறு வயதில் படித்த சாலை விதிகளை 50-ம் வயதிலும் கைக் கொண்டு வருகிறார். யாரும் தினம் தினம் இவருக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனால்..,

இஸ்ரவேல் ஜனங்கள் தசமபாகம் செலுத்தி வருவதற்கு மட்டும் வேதம் சொல்கிறதா ? சட்டம் இருக்கிறதா? என்று கேட்கிறார்... ஆதி மனிதர்களான ஆபேல் காயீன் ஆதாம் முதல் இன்றுவரை அனைத்து மாந்தர்களும் தேவ ஆசீர்வாதத்தை தேடி வருகிறார்கள். அதற்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியமே இல்லை. என்றாலும்..,

இது நியாய விசாரணைக்கோர்ட் என்பதால் ஆதாரத்தையும் காட்டுகிறேன். எபிரெய நிருபம் எழுதிய ஆக்கியோன், எபி 7 : 5-8 வசனங்களில் அன்றியும் இங்கே (புதிய ஏற்பாட்டு காலத்தில்) மரிக்கிற மனிதர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள். அங்கேயோ (பழைய ஏற்பாட்டிலோ) பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் (மெல்கிசேதேக்) தசமபாகம் வாங்கினான் என்று வாசிக்கிறோம்.

அரசு வக்கீல் : This is too much Lord,.பாஸ்டர் ஜோன்ஸ் நீதிமன்றத்தையும் பிரசங்க மேடையாக்கி சபையாரை ஏமாற்றியது போல நீதிமன்றத்தாரையும் ஏமாற்றப் பார்க்கிறார். மைலார்ட்...!


நீதிபதி: பொறுங்கள் மிஸ்டர் பப்ளிக் பிராஸிக்யூட்டர்.. வாதியின் பேரில் சாட்டப்பட்ட குறற்றம் அவர்களின் வேதத்திற்குரியதாகையால் அவர் அதை விளக்கிக்கூற உரிமை உண்டு நீங்கள் தொடர்ந்து பேசலாம் பாஸ்டர் ஜோன்ஸ்

பாஸ்டர் ஜோன்ஸ் : தேங்க்யூ மைலார்ட்... இங்கே (புதிய ஏற்பாட்டு காலத்தில்) மரிக்கிற மனிதர் தசமபாகம் வாங்குகிறார்கள் என்பது நிகழ்காலத்தில் சொல்லப்பட்டபடியால் இந்த எபிரெயருக்கு எழுதின நிருபம் எழுதப்பட்ட கி.பி.70ல் கூட தசமபாகம் வாங்கியிருக்கிறார்கள், மைலார்ட்... அதாவது,

இஸ்ரவேல் ஜனங்களுக்கு நியாயப் பிரமாணம் கொடுத்த கர்த்தர் அதை நித்திய பிரமாணமாக கொடுத்தார் அவைகளில் இந்த தசமபாகம்  கொடுக்கும் கட்டளையும் ஒன்று என்று எண் 18 :23, லேவி 23 :14 ஆகிய வசனங்கள் உறுதியளிக்கின்றன.

அரசு வக்கீல் : இயேசு மத் 23 :23-ல் நியாயப்பிரமாண சட்டத்தை கைக்கொள்வதை விடாதிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே. நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்டவரா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : இல்லை

அரசு வக்கீல் : ஏன் நியாயப்பிரமாணம் இப்பொழுது இல்லையா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : இல்லை. ஏனென்றால் இயேசு நியாயப்பிரமாணத்தை சிலுவையில் மரித்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார்.

அரசு வக்கீல் : அப்படியானால் நியாயப்பிரமாணமானது இயேசு சிலுவையில் மரிக்கும் வரை அதிகாரத்தில் இருந்தது சரிதானே ?

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆம்... சரிதான்.

அரசு வக்கீல் : அதாவது இயேசு மரிக்கும்வரை நியாயப்பிரமாணம். அதிகாரத்திலிருந்தது வேதபாரகரும், பரிசேயரும் அதற்கு கீழ்பட்டிருந்து நியாயப்பிரமாணத்தின் ஒரு கட்டளையான தசமபாகம் செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்தார்கள். 

எப்பொழுது நியாயப்பிரமாணத்தை இயேசு சிலுவையிலே நிறைவுறச் செய்தாரோ அப்பொழுதே தசமபாகம் கொடுக்க வேண்டிய கட்டளையும் நிறைவுற்றது என்றுதானே அர்த்தம்.

பாஸ்டர் ஜோன்ஸ் : யுவர் ஹானர் இங்கே வக்கீல் தன் வாதத்திறமையால் சத்தியத்தை மறைக்க விரும்புகிறார்.

நீதிபதி :- இல்லையே நீங்கள்தான் இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்பட்டது எனறீர்கள். ஆகையால், அரசு வக்கீல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு கீழ்படிய வேண்டியதில்லையே என்கிறார்.நீங்கள் ஏன் அதை மறுக்கிறீர்கள்?

பாஸ்டர் ஜோன்ஸ் : யுவர் ஹானர். நான் சொல்வதை தாங்கள் நிதானிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அதாவது ...,

முதல் வகுப்பு படிக்கிற மாணவன் அம்மா, அப்பா என்கிற எழுத்தைக் கற்றுக் கொள்ள அ...ம்...மா... = அம்மா, அ...ப்...பா... = அப்பா என்று எழுத்துக்களை உச்சரித்து படிக்கிறான். அதே வார்த்தைகளை 5-ம் வகுப்பு படிக்கிறவன் அம்மா, அப்பா என்று விரைவாக படிக்கிறான். அதாவது 

மேல்வகுப்பு படிக்கிறவன் கீழ்வகுப்பில் படித்தவைகளை ஒழித்துவிடவில்லை. அவைகளில் தேர்ச்சி அடைந்தவனாக படிக்கிறான் பட்டப்படிப்பு முடித்தவனை பார்த்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாயா? அதற்கு அத்தாட்சி உண்டா ? என்று எவரும் கேட்கிறதில்லை.

அதேபோல நியாயப்பிரமாணம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் நிறைவேற்றப்பட்டது என்பது உண்மைதான். அதற்காக அது ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூற முடியாது. அதன்படி பத்துக் கற்பனைகளில் ஒன்றான கொலை செய்யாதிருப்பாயாக என்ற நியாயப்பிரமாணம் இயேசுவின் மரணத்தால் மாற்றப்பட்டு தன் சகோதரனை பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகன் (1 யோவா 3 : 15) எனறு சொல்கிறது. இப்படியிருக்க 

தசமபாகம் கொடுக்கிறது மாத்திரம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டது என்றும், இயேசு தன் மரணத்தினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிவிட்டதால் அதைக் கைக்கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறுவது வேதத்திற்கடுத்ததல்ல.

நியாயப்பிரமாணம் கற்பிக்கிற தசமபாகத்தைவிட (10-ல் ஒன்றைவிட) தேவன் மேலுள்ள அன்பினால் அதைவிடஅதிகமாக புதிய ஏற்பாட்டு திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேநிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று விற்கப்பட்டவைகளின் கிரயத்தை கொண்டுவந்து அப்போஸ்தலருடைய பாதங்களிலே வைத்தார்கள் என்றும்,  


தசமபாகத்திற்கும் அதிகமாக தங்கள் உடமைகளை விற்ற கிரயத்தை சபைக்கு தந்திருக்கிறார்கள் என்றும் (அப் 4 :34-37, 5 :1, 2) வாசிக்கிறோம். எபிரெய நிருபத்திலும் தங்கள் ஆஸ்திகளையும் ஆதிதிருச்சபையார் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தார்கள் என்றும் (எபி 10 :34) எழுதப்பட்டுள்ளது. ஆக,

புதிய ஏற்பாட்டில் இந்த உபதேசம் இல்லையென்று சொல்லக்கூடாது. இயேசு நியாயப்பிரமாணத்திற்காக மரித்தது மட்டுமல்லாமல் அவர்  உயிர்த்தெழுந்ததால் சத்தியத்திலும் ஒரு உயிர்ப்பித்தலை உண்டுபண்ணினார். 
 
பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர் தேவனுடைய ஊழியர்களாக எண்ணப்பட்டார்கள் (லேவி 25 : 55) என்று பார்க்கிறோம். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ யாவரும் பிள்ளைகள்  அதாவது சுதந்தரவாளிகள் எனப்படுகிறார்கள். (யோவா 1 : 12, ரோமர் 8 :14, 17). பழைய ஏற்பாட்டில் கட்டாயமாக்கப்பட்ட பிரமாணம், புதிய ஏற்பாட்டில் அன்பின் பிரமாணமாக பத்தில் ஒன்றல்ல அதற்குமேல் கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில்..,

திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன், உபதேசிக்கிறவனுக்கு சகல நன்மைகளிலும் (வருமானங்களிலும்) பகிர்ந்து கொடுக்கக்கடவன் என்று (கலா 6: 6) பவுலும் எழுதியுள்ளார். பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் லேவி கோத்திரம் ஆலய பணிவிடைக்காக பிரித்து வைக்கப்பட்டது போல புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஊழியம் செய்கிறவர்கள் விசேஷமாக சபை நடத்துகிறவர்கள் அத்தகைய தசமபாகங்களையும் காணிக்கைகளையும் பெற்று ஊழியம் செய்து தேவராஜ்யம் விரிவடையும் சேவையைச் செய்துவர தேவனே அனுமதித்திருக்கிறார்.

அவர்களை ஊழியத்திற்கு அழைத்தவரும் அவரே. ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே, வேதம் சொல்கிறவைகளை நாங்கள் கலப்பில்லாமல் பேசி, தேவபக்தர்களின் ஆசீர்வாதத்துக்காக பிரயாசப்பட்டு வருகிறோமேயல்லாமல் எவரையும் நாங்கள் ஏமாற்றவில்லை. இது நான் மட்டுமல்ல உலக முழுவதுமுள்ள பரிசுத்தவான்கள் தசமபாகம் வாங்கி தேவராஜ்யத்தின் சேவையைச் செய்து வருகிறார்கள்.

ஆகவே என்மேல் போடப்பட்ட வழக்கு வேத பிரமாணத்துக்கு மாறானது என்பதோடு நான் வேதத்தை என் சொந்த லாபத்திற்காக பயன்படுத்தி திருச்சபை விசுவாசிகளை வஞ்சித்தேன் என்பது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு என்பதை அறிவித்துக் கொள்வதோடு என்மேல் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கனம் கோர்ட்டார் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.


நீதிபதி :-அரசுவக்கீல் மேற்கொண்டு ஏதாகிலும் கேட்க விரும்புகிறீரா?

அரசு வக்கீல் : கனம் நீதிபதியவர்களே, கோர்ட்டார் அவர்களே, பாஸ்டர் தன் சபையிலே பிரசங்கிப்பது போல கோர்ட்டையும் பிரசங்க மேடையாக்கிக் கொண்டு தான் நியாயவாதி என்று காட்டுகிறார். போதாததற்கு தசமபாகம் செலுத்தி வந்தது பழைய ஏற்பாட்டுக் காலம் தற்போது சொத்திலும் பங்குதாரராக வேண்டும் என்று புதிய போதனை செய்கிறார்.

கடந்த 20 வருட காலமாக இவரது போதனையைக் கேட்ட மக்கள் இவரது போதனையால் மயங்கியும், தசமபாகம் காணிக்கை தராவிட்டால் தண்டனை வரும் என்று பயமுறுத்தியும் மக்களின் சம்பாத்தியங்களை கொள்ளையிட்டு வந்தார் என்று சொல்வதில் தவறில்லை. கோர்ட்டையே தன் வசப்படுத்துகிறதுபோல பேசும் இவர் பாமரமக்களை ஏமாற்றமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

                                                                                                                                       -தொடரும்..

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?