அருமையானவர்களெல்லாம் அவரவர் விருப்பம் போல அசத்துகின்றனர்.

“இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்"

இணைய  உலகின் கிறிஸ்தவ நண்பர்களே என் அன்பிற்கு உகந்த ஆவிக்குரிய உறவுகளே என் மீட்பரும் ஆண்டவருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனியப் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன். இதெற்கெல்லாம் காரணரான தேவனாகிய கர்த்தரை நன்றியுடன் துதிக்கிறேன்.

இணைய உலகில் இதுவரை இல்லாத வகையில் கிறிஸ்தவர்களுடைய செயல்பாடுகளும் பங்களிப்புகளும் அதிகரித்து வருகிறதை நாம் அறிவோம். அதேநேரம் இணையத்தில் நுழைகிறவர்கள் யார்? யாருடன் உறவாடுவது? இவர்களில் யார் நல்லவர்? யார் கள்ளர்? என்று கண்டுபிடிக்க முடியாமல் நாள்தோறும் தடுமாறுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல..

குறை சொல்லுவதாக நினைக்காமல் இதைப்படியுங்கள் கோபப்பட  வேண்டாம். அருமையான ஊழியர்களில் அநேகர்..

இணையத்தில் நுழையும் சில ஊழியர்கள்  குறைந்த காலங்களிலேயே தாங்கள் நுழைந்த தளத்தை அரட்டை அரங்கமாக மாற்றி அசத்தி விடுகின்றனர். அதுவரைக்கும் அவர்களுக்குள் இருந்த தாலந்துகளெல்லாம் பொங்கி வழிகிறது. அச்சமயங்களில் கட்டுக் கதைகளால் இணையத்தை கலகலப்பாக்கி விடுகின்றனர். 

ஒரு மனிதர் தான் ஒருத்தியை பயண வழியில் கண்டதாகத் துவங்கி அவள் வாந்தி எடுத்த அழகை அது சம்பந்தமான சம்பவங்களைப்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் கற்பனையாக செதுக்குகிறார். அதை கவனமாகப் படிக்கிற அனைவரும் அந்த பதிவிற்கு விழுந்து விழுந்து பிண்ணூட்டமிட்டு பிறவிப் பயணைக்கண்டதைப் போல  பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

கிச்சனில் அதாங்க சமையலறையில் கலக்கியதை எங்குமில்லா வரிகளில் வடித்து சிலாகித்துப் போகிற சிலரோ அத்துடன் நின்றுவிடாது மனைவிக்கு துணி துவைத்ததைச் சொல்லி மகிழ்ந்து மலைக்கின்றனர். 

சிலர் நகைச்சுவைகளை மட்டுமே பதிவு செய்து காமெடியர்களாய் கலக்குகின்றனர். இதையெல்லாம் படித்த இரட்சிக்கப்பட்டதாய் சொல்லும் நண்பர் கூட்டம் சிரிப்பாய் சிரிக்கிறது.

ஒருசிலரோ தங்கள் அழகு மின்னும் புகைப்படங்களைப் பதிவிட்டு இங்கேபார்..! என்னைப்பார்..! என் அழகைப்பார்..! என் படையைப்பார்..! என்று இணையப் பிரவேசத்தின் அர்த்தத்தை அலங்கரித்து இதுவே போதுமென்று இருந்து விடுகின்றனர். ஆக

அருமையான என் நண்பர்களெல்லாம் அவரவர் விருப்பம் போல அசத்துகின்றனர். சில விடயங்கள் அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் கர்த்தருடைய வேலை..? 

கர்த்தருடைய வேலையா? இணையத்திலா? அது எதற்கு? என்று அமைதியடைந்து விடுகின்றனரோ.. என அச்சமேற்படுவதுண்டு..

இப்படியான பதிவை படித்தவுடன் இதை எழுதியவனுடைய பதிவுகளில் எங்கேயாவது ஓட்டை இருக்கிறதா? என இப்போதே பார்த்து வருகிறேன் என சிலர் சிறகடித்து பறந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பயணம் சிறக்க சிறப்போடு மீன்டும் வர வாழ்த்துகிறேன்.

ஆக என் அன்பு நண்பர்களே தேவசித்தம் செய்ய விரும்பும் அன்பர்களே இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும். நாம் தேவ சித்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் நம்மை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறோம் எனவே சுத்த சுவிஷேசத்தை சரியாய் அறிவிக்க சத்தியத்தியத்தை அறிந்து அதனடிப்படையில் ஒற்றுமை உள்ளவர்களான நாம் ஒன்றாக இணைவோம்.

இப்படியாக நாம் நம்மைக் குறித்து அறிவடையவும் தேவனை அறிகிற அறிவிலே வளரவும் நாம் அறிந்ததை பிறருக்கு அறிவிக்கவும் நமக்குள் ஒரு கூட்டமைப்பு இருப்பது நலம் என நினைக்கிறேன்.

கிறிஸ்துவின் உபதேசத்தில் நிற்கிறவர்களும் கிறிஸ்தவ உபதேசத்திற்கு எதிரான வல்லமைகள் தலையெடுத்து எழும்புகிறபோதெல்லாம் அவற்றிற்கெதிராகப் போராடுகிறவர்களும் அல்லது போராடுகிற எண்ணம் சிறிதளவேனும் உள்ளவர்களும் இவற்றிற்காக ஊக்கமாக ஜெபித்து வருகிறவர்களுமான நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து “இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்" என்றதொரு அமைப்பை உருவாக்க விரும்புகிறேன்.

இந்த ஐக்கியத்தில் என்னுடைய பங்களிப்பு எண்ணவாக இருக்குமென்று முன்னதாகவே அறிவித்து விடுவது நலம் என கருதுகிறேன்.

“இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்" என்ற இந்த அமைப்பில் நான் கடைசிவரை  கடைநிலை உறுப்பினராகவும் கிறிஸ்துவில் உண்மையும் தாழ்மையுமுள்ளவனாகவும் உபதேசத்தினிமித்தம் யாவருடனும் தன்னடக்கமுடைய  ஊழியக்காரனாகவும் இருக்கவுமே விரும்புகிறேன். இந்த ஐக்கியத்திற்கு என்னால் இயன்றவரை பொருளிலும் உழைப்பிலும் பங்காற்றுவேன்.

ஒருவேளை இதை வாசிக்கிற உங்களில் யாராகிலும் இதே தரிசனத்தோடு அல்லது  நான் ஒருங்கிணைக்க எண்ணிய காரணங்களோடு ஒத்துப்போகிற ஒரு அமைப்பை நான் நினைத்திருக்கிறபடியான செயல் திட்டங்களோடு உருவாக்கி இருப்பீர்களானால் நான் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக இணைந்து பணிசெய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.
இணையத்திலும் பரிசுத்த தேவனுக்கு சாட்சியான ஒரு கூட்டம் எழுந்து வாழ்ந்து சத்திய வசனத்தின் மேன்மையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் இதுவே என் விருப்பம்.

சத்திய தேவனை உடையவர்கள் எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஏனென்றால்.. இதுதான் கிறிஸ்து இயேசுவின் விருப்பமாகும். “பிதாவேஇ நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காகஇ நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும் என்னை நீர் அனுப்பினதையும் நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும் நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். என்றார். 
                                                                           (யோவா 17: 21..23)  ஆனபடியினாலே

இணையதளத்திலும் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் நிற்பவர்கள் ஒன்றினைந்து நின்றால்.. கிறிஸ்தவர் அல்லாதேரை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த முடியும் என்கிறேன்.  அதற்கு “இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்" போன்றதொரு ஐக்கியம் அவசியமாக இருக்கிறது என்பதை ஆவியில் உணருகிறேன். 
இந்த ஐக்கியத்தின் சாதக பாதகங்கள் அல்லது  இந்த அமைப்பின் முன்னேற்றப் பணிகளில் நம்முடைய செயல் திட்டங்கள் மற்ற ஆலோசனைகள் ஏதாகிலும் தர விரும்புவீர்களானால் வரவேற்கிறேன். இணைந்து செயல்பட விரும்புகிறவர்கள்  மின்னஞ்சல் அனுப்புங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
                                                                                       இப்படிக்கு

       உங்களுடன் தேவ ஊழியன்,  இம்மானுவேல் ஆபிரகாம்.

                                     மின்னஞ்சல்:- immanuel580@gmail.com



என்னைப்பற்றி மேலதிக விபரங்களுக்கு:- http://immanuel2.wordpress.com/about/
                                                                               

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?