உண்மையை சொல்லுங்கள். தசமபாகம் கொடுக்காமல் விட்டிருக்கிறீர்களா ? - தசமபாக வழக்கு 005

பாஸ்டர் ஜோன்ஸ் : கனம் நீதிபதியவர்களே, கோர்ட்டார் அவர்களே, கடைசியாக இயேசு கூறிய வேத வாக்கை தங்கள் பரிசீலனைக்கு தெரிவித்துவிட்டு என் வாக்குமூலத்தை நிறைவு செய்கிறேன். அதாவது 

இயேசு மாற்கு 10: 29,30 வசனங்களில்... என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இமமையிலே, நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

இம்மையிலே நூறத்தனையாக அவைகளைதிரும்ப பெறுவான் என்று சொல்லியிருப்பதால், ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கும் மக்கள் எங்களிடம் காணிக்கை தந்திருக்கிறார்கள். 

ஒன்றுக்கு நூறாக ஆசீர்வதிக்க இயேசு வாக்களித்திருக்கிறபடியால் 10-ல் ஒன்று கொடுப்பது சாதாரணமாகி விடுகிறதை கனம் கோர்ட்டார் அவர்கள் கவனிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். என்மேல் சாட்டப்பட்ட குற்றம் வேதத்தை தவறாக போதித்து தசமபாகம் என்ற காணிக்கையை கட்டாயப்படுத்தி வாங்கினேன் என்பதுதானே. 

இதில் பாதிக்கப்பட்டவர் எனது சபை விசுவாசியும் (அங்கத்தினரும்) கடந்த 20 ஆண்டுகாலம் எனது பிரசங்கத்தைக் கேட்டு வருபவருமான எனது நண்பர் டைட்டஸை சில கேள்விகள் கேட்க கனம் நீதிபதியவர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவரை விசாரணை செய்வதன் மூலம் சில உண்மைகளை கோர்ட்டார் அவர்களுக்கு விளங்கப்பண்ண முடியும் என்று நம்புகிறேன்.

அரசு வக்கீல் : ஆக, உங்கள் மேல் சாட்டப்பட்ட குற்றங்களில் ஒன்றையும் நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள்... அப்படித்தானே..?

பாஸ்டர் ஜோன்ஸ் : சம்பந்தப்பட்ட வாதியின் வாக்குமூலத்தையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்.

நீதிபதி : உங்களுக்கு வக்கில் உண்டானால்  அவர் விசாரணை செய்யட்டும், கேள்விகளைக் கேட்கட்டும்

பாஸ்டர் ஜோன்ஸ் : எக்ஸ்கியூஸ்மி,  மைலார்ட்... நான் சிவில் அல்லது கிரிமினல் குற்றம் ஏதும் செய்யாதவன். மேலும் என்னுடைய உபதேச விஷயத்தில் பிழை இருப்பதாகச் சொல்லித்தான் என்மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பதால் நான் வக்கீல் யாரையும் அமர்த்திக் கொள்ளவில்லை. நானே தங்கள் முன்னிலையில் அவரிடம் கேள்வி கேட்க அனுமதிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

நீதிபதி : யெஸ் பர்மிசன் கிராண்டட்  (திருச்சபை விசுவாசி டைட்டஸ் வருகிறார், விசாரணைக் கூண்டில் ஏறுகிறார்.  சத்யபிரமாணம் செய்கிறார்.)  பாஸ்டர் ஜோன்ஸ் இப்போது உங்கள் விசாரணையை தொடங்கலாம் ..

பாஸ்டர் ஜோன்ஸ் : (கூண்டில் நிற்கும் விசுவாசி டைட்டஸ் அவர்களைப்பார்த்து) உங்கள் பெயர் என்ன ?

டைட்டஸ் (விசுவாசி) : என் பெயர் டைட்டஸ் என்பது உங்களுக்கு தெரியாதா? இதென்ன கேள்வி ?

பாஸ்டர் ஜோன்ஸ் : எனக்குத் தெரியும். ஆயினும் கோர்ட்டார் அறியும்படிக்கே கேட்டேன்.

டைட்டஸ் : என் பெயர் டைட்டஸ், என் அப்பா பெயர் பவுல்...

பாஸ்டர் ஜோன்ஸ் : நன்றி, எத்தனை வருடகாலமாக எங்கள் சபையில் அங்கத்தினராக இருக்கிறீர்கள்.

டைட்டஸ் : கடந்த 20 வருட காலமாக...

பாஸ்டர் ஜோன்ஸ் : இதுவரை என்றைக்காவது உம்மிடம் தசமபாகம் கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறேனா...?

டைட்டஸ் : மாதாமாதம் காணிக்கை கவரில் பெயர் எழுதி காணிக்கை பெட்டியில் போட்டுக் கொண்டு வருகிறேனே. அப்புறம் ஏன் இப்படி சந்தேகமாய் கேட்கிறீர்கள் ?

பாஸ்டர் ஜோன்ஸ் : நான் சொல்வதை கவனித்து பதில் சொல்லுங்கள்... நான் என்றைக்காவது தனிப்பட உங்களிடம் தசமபாகம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேனா...?

டைட்டஸ் : நீங்கள் பிரசங்கத்திலே சொல்கிறீர்களே... தனிப்பட வேறு கேட்க வேண்டுமா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : நான் பைபிளிலிருந்து போதனை கொடுத்தேன். அவ்வளவுதானே. உங்களிடம் தனியாக கேட்டிருக்கிறேனா...?

டைட்டஸ் : அதற்கென்ன அர்த்தம் ? போதித்தது போல செய்யுங்கள் என்பதுதானே அர்த்தம் ?

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆம்... அப்படிச் செய்வது உங்கள் விருப்பம் அல்லது அது உங்கள் விசுவாசம் என்றுதானே சொன்னேன். உங்களிடம் தனியாக தசமபாகம் கொடுங்கள் என்று கேட்டேனா ?
டைட்டஸ் : இல்லை. என்னிடம் தனியாக ஒருபோதும் கேட்டதில்லை.

பாஸ்டர் ஜோன்ஸ் : தயவு செய்து இதைக் குறித்துக் கொள்ளுங்கள் யுவர் ஹானர்.

நீதிபதி : Yes ... புரஸீட்..

பாஸ்டர் ஜோன்ஸ் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்.?

டைட்டஸ் : நான் அரசு தொழிலகத்தில் பிட்டராக பணியாற்றுகிறேன்.

பாஸ்டர் ஜோன்ஸ் : நீங்கள் பணியில் சேரும்போது உங்கள் மாத சம்பளம் எவ்வளவு ?

டைட்டஸ் : மாதம் ரூபாய் 1500 கிடைத்தது...

பாஸ்டர் ஜோன்ஸ் : அப்போதே நீங்கள் தசமபாகம் செலுத்தினீர்களா ?
டைட்டஸ் : ஆம், அப்போதே பிடித்தம் போக வாங்கும் சம்பளத்தில் 130 ரூபாய் தசமபாகம் கொடுத்து வந்தேன்.

பாஸ்டர் ஜோன்ஸ் : தற்போது உமது சம்பளம் எவ்வளவு ?

டைட்டஸ் : O .T -யெல்லாம் சேர்த்தால் சுமார் 30 அல்லது 35 ஆயிரம் வாங்குவேன்...

பாஸ்டர் ஜோன்ஸ் : இதில் தசமபாகம் செலுத்துவீர்களா ?

டைட்டஸ் : என்னுடைய லோன், மற்றும் பிடித்தம் போக வாங்கும் சம்பளத்தில் தசமபாகமாக ரூபாய் 2000 மாதந்தோறும் கொடுப்பதுண்டு...

பாஸ்டர் ஜோன்ஸ் : நியாயப்படி 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிற நீர் 3 ஆயிரம் ரூபாய் தசமபாகமாக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ரூ.2000தான் கொடுத்து வந்திருக்கிறீர்கள் சரி... இடையில் தசமபாகம் கொடுக்காமல் விட்டிருக்கிறீர்களா ? உண்மையை சொல்லுங்கள்.

டைட்டஸ் : பைபிள் மேல் ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்துவிட்டு பொய் எப்படிச் சொல்வேன்... இடையில் ஏதாவது சில மாதங்களில் கொடுக்காமல் தவறி இருக்கிறேன்...

- தொடரும்..,

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?