முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 4

மனம்திரும்பினவர்கள் முதலாவது பாவத்திற்கு மரித்துப் போனவர்களாகிறார்கள்.  மரித்துப் போனவர்கள். அதாவது பாவத்திற்கு மரித்தவர்கள்தான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள தகுதியுள்ளவர்கள். காரணம் ஞானஸ்நானம் என்பதின் இன்னொரு வடிவம்.. அடக்க ஆராதனையாகும். காரணம் பாவத்திற்கு அவன் செத்துப் போய்விட்டான். செத்துப் போனவனை அடக்கம் செய்வதுதான் நமது இயல்பு. இங்கே ஒருவன் சரீரத்தில் அல்ல.. பாவத்திற்கு மரித்துப் போய் விட்டான். பாவம் என்னவென்பதை உணர்ந்து பாவத்திற்கு ஏதுவான எந்த ஒன்றையும் இனி செய்ய மாட்டேன். என்று தீர்மாணித்து அனைத்தையும் அறிக்கை செய்து விட்டு விட்டதினிமித்தம் பாவத்திற்கு மரித்துப் போனவனாகிறான். (ரோம 6:2 11 மற்றும் 8:13) இனி அதில் அவன் பிழைக்கப் போவது இல்லை. மரித்துப் போனபின் அந்த சடலத்தை அதே வண்ணமாக வீட்டிலே வைத்துக் கொண்டிருக்க மாட்டோம். ஒருவேளை அவர் நமக்கு மிகவும் பிரியமானவர் என்hதற்காக செத்துப் போனாலும் பரவாயில்லை நாங்கள் சில நாட்கள் வைத்திருக்கிறோம் என்று எவரும்  சொல்லப் போவதில்லை. செத்துப் போன மனிதனது சரீரத்தை கண்டிப்பாக அடக்கம் செய்தே ஆக வேண்டும். நாம் அப்படித்தான் செய்கிறோம்.  மீன்டும் சொல்லுகிறேன் அவன் அடக்கம் செய்யப்பட்டால்தான் அவன் செத்துப் போனவன் என்று அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு மனிதன் செத்துப் போய்விட்டான் என அறிவித்தபின் அவனது உடலை அடக்கம் செய்யவில்லையானால் அவன் செத்துப்போனதாக எவரும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் செத்தவன் அடக்கம் செய்தாகப்பட வேண்டும்.

அநேக சன்மார்க்கர் உண்டு. இவர்கள் இப்படிச் சொல்வதுண்டு. நாங்கள் கொலை செய்யவில்லை. விபச்சாரம் செய்யவில்லை பிறன் பொருளை இச்சிக்க வில்லை. என் மனைவிக்கு உண்மையான நல்ல புருஷனாக என் பிள்ளைகளுக்கு பொறுப்புள்ள அன்பான தகப்பனாக வேலைக்காரர்களுக்கு நல்ல நியாயமான முதலாளியாக இருக்கிறேன். என் வியாபாரத்திலே கள்ளத்தராசு வைக்கவில்லை. அல்லது நான் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்திலே பிறந்தேன் எனது தகப்பனார் நல்ல சாட்சியுள்ள போதகராக இருக்கிறார் நான் கிறஸ்தவ ஒழுங்கிலே ஒழுக்கத்திலேயே வளர்க்கப்பட்டுள்ளேன் நான் யாருக்கும் எந்த கெடுதியும் செய்யவில்லை  எந்தப் பாவமுமே செய்யாத நான் எதற்ககாக? ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஐயா...! பரிசுத்த வேதாகமத்தில் மாற் 10:17.-ல் ஒரு மனிதனைப்பற்றி எழுதப்பட்டுள்ளது....
பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில் ஒருவன் ஓடிவந்து அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
 18. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
 19. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக கொலை செய்யாதிருப்பாயாக களவு செய்யாதிருப்பாயாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக வஞ்சனை செய்யாதிருப்பாயாக உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
 20. அதற்கு அவன்: போதகரே இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான்.
 21. இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
 22. அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால் இந்த வார்த்தையைக் கேட்டு மனமடிந்து துக்கத்தோடே போய்விட்டான்.

என்று இங்கே நாம் படிக்கிறோம். இங்கே அடையாளமிட்டுக் காட்டப்படும் இந்த மனிதன் சிறுவயது முதல் எந்தப் பாவம் செய்யவில்லை ஒரு வேளை ஏதாவது பாவம் செய்திருந்தாலும் நியாயப்பிராமனத்தின்படியான பலிகளை செலுத்தி நிவாரணம் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். எப்படியோ, நடு வழியில் பொதுவான பாதையில் எல்லாரும் பார்க்கும் வண்ணமாக தான் பணக்காரன் மட்டுமல்ல குற்றமற்றவன் என்ற மேடடிமையான எண்ணமில்லாமல் மிகுந்த பணிவோடு ஆண்டவராகிய இயேசுவை ஆண்டவர் என்று தெரியாமல் நல்ல போதகர் என்று அறிந்து, இவர் நமக்கு நித்திய ஜீவனை அடையும் வழி சொல்லுவார், நாம் எப்படியாகிலும் நித்திய ஜீவனை அடைந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இயேசுகிறிஸ்துவை வணங்குகிறான் இன்றைய நாட்களில் எல்லாரும் பயண்படுத்துகிற வார்த்தையில் சொல்வதானால் இயேசுகிறிஸ்துவை  ஆராதிக்கிற அனுபவம் உள்ளவனாக இந்த குற்றமற்ற பணக்கார  மனிதன் காணப்பட்டான். ஆனால் தொடர்ந்து இவனைக் குறித்து இயேசு கிறிஸ்து இவ்விதமாகச் சொன்னார் :23. அப்பொழுது இயேசு .....ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
 24. சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!
 25. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

அப்படியானால் இடையில் நடந்ததுதான் என்ன?  
அவன் கர்த்தருடைய ஆலோசனைக்குக்கீழ்ப்படியவில்லை.
 கர்த்தர் மேல நம்பிக்கை இருக்கலாம் அவரால்தான் நித்திய ஜீவன் உண்டு என்ற நம்பிக்கை இருக்கலாம் அவரை எவ்விடத்திலும் எந்த நிலையிலும் ஆராதிக்கிற தன்மை இருக்கலாம் சிறுவயது முதல் கர்த்தருக்கு பயந்து நடக்கிற பழக்கம் உடையவராகவும் இருக்கலாம் எந்த நிலையிலும் எவருக்கும் துரோகம் செய்யாதவராகவும் இருக்கலாம். இன்னும் பாவக் கறையே இல்லாதவராகவும் இருக்கலாம்.  எப்படியிருந்தாலும் காத்தருடைய ஆலோசனைக்கு  கீழ்ப்படிவது அவசியம் மட்டுமல்ல.., அவசரம். ஏனென்றால்..,

ஞானஸ்நானம்  என்பது :

லூக்கா 7:30 ... தேவனுடைய ஆலோசனை

மத் 3:15 .... தேவ நீதி, என்பதனால்தான்,  லூக் 7:29 ஞானஸ்நானம் பெற்றவர்கள் தேவன்  நீதிபரர் என அறிக்கையிட்டார்கள்.

இங்கே பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிற ஆலோசனை  என்னவெனில்:

ரோமர் 6:19 தேவ நீதிக்கு அடிமைகளாக உங்கள் சரீரத்தை ஒப்புக் கொடுங்கள். என்பதே.

ஒருவேளை நம்மிடத்தில் பாவம் இல்லாமல் இருக்கலாம் பரிசுத்தமாக வாழ்வதாகச் சொல்லலாம். நாம் கிறிஸ்தவ போதகருக்கு மகனாகவே பிறந்து, கிறிஸ்தவ குடும்பத்திலேயே பிறந்து அல்லது கிறிஸ்தவ உபதேசத்திலேயே வளர்க்கப்பட்டவர்களாக, கிறிஸ்தவ மறையின்படியே சிறுவயது முதல் நடத்தப்பட்டவர்களாக இருக்கலாம்.  அல்லது எப்பொழுதும் எவ்விதப் பாவமும் செய்யாதவர்களாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் நாம் தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். ஞானஸ்நானமென்பது தேவ ஆலோசனை, தேவ நீதி அது பாவத்திற்கு மரித்துவிட்ட மனிதனை அடக்கம் செய்வதற்கொப்பான ஒரு நிகழ்ச்சி.

இயேசுகிறிஸ்து பாவமே செய்யாதவராக, பாவமே இல்லாத பரிசுத்தராக பிறந்திருந்தபோதும்,  நாம் கீழ்ப்படியவேண்டும், அவரது மாதிரியை நாம் பின்பற்ற வேண்டுமென்பதற்காக அவர் நிறைவேற்றி நமக்கு ஒரு மாதிரியை வைத்துப்போனார். 
நாம் அவரை விசுவாசிப்பதாலோ, அவரை ஆராதிப்பதாலோ, அவரைத்தேடி வருவதாலோ அவரை எந்தஇடம், எந்தச்சூழல் என்று பார்க்காமல் தாழவிழுந்து பணிந்து கொள்ளுகிறத் தன்மை உள்ளவர்ளகளாக இருப்பதாலோ நாம் அவரது சித்தத்தின்படி செய்கிறோம் என நினைத்து விடக்கூடாது. அவருடைய ஆலோசனைகளில் சிறிதானதொன்றாகிலும் மீறி, அவரது ஆலோசனையை புறக்கணித்து, அவரை அவமானப்படுத்திவிட்டு, அவருக்குப் பிரியமாய் நடக்கிறேனென்று பொய் சொல்லக் கூடாது.
ஞானஸ்நானம் எப்படி எடுத்தால் என்ன? முழுகிதான் எடுக்க வேண்டுமா? என்று சிலர் கேட்கிறார்கள்..  நமது அடுத்த பதிவுகளில் அதுகுறித்து விரிவாக பார்ப்போம்  

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?