கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பது ஏன்? (சாதி அமைப்பை தூக்கிப்பிடிக்கும் பதிவல்ல இது )
குறிப்பு: புராடஸ்டண்ட் கிறிஸ்தவ வரலாற்றின் பின்னணியில் இதை எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்து கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கும் பொருந்தும்.
பெரும்பாலும் சாதியை குறித்து பேசும் போதெல்லாம் மனுதர்மத்தை பற்றிய பேச்சும் எழும். அப்போதெல்லாம் எதிர்வினையாற்றும் அவர்கள் கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லையா? கிறிஸ்தவத்தில் சாதி இருக்கிறது என்று சொல்வார்கள். பல பேர்களுக்கு இதிலுள்ள அடிப்படையான காரணம் என்னவென்று தெரியாததினால் ஒரு சில விஷயங்கள் விளக்கிச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் சாதி பார்க்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தியாவில் கிறிஸ்தவம் பரம்புவதற்கு தமிழ்நாட்டில் மூன்று முக்கிய கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் காரணம். குறிப்பாக தென் தமிழகத்தில் லண்டன் மிஷன், எஸ் பி ஜி மிஷன், சிஎம்எஸ் மெஷின் போன்ற அமைப்புகள் கிறிஸ்தவத்தை தீவிரமாக பரப்பினர். இவை எல்லாமே அங்கிலிக்கன் சர்ச் என்கிற அமைப்பில் கீழுள்ள மிஷனரி அமைப்புகள். அந்த காலங்களில் இங்கிலாந்து நாட்டில் மற்றும் அயர்லாந்து நாட்டில் சர்ச் சார்ந்து இல்லாமல் மிஷனரி இயக்கங்கள் இருக்காது. தனிப்பட்ட போதகர்களுக்கு அனுமதியும் கிடையாது.
இவ்வாறு ஆங்கிலிக்கன் சர்ச் தனது கிறிஸ்தவத்தை பிறரிடத்தில் கொண்டு செல்வதில் சில ஆழமான கொள்கைகளை தன்னிடத்தில் கொண்டிருந்தது.
1. யாரிடத்தில் கிறிஸ்தவத்தை கூறுகிறோமோ அவர்களுடைய மொழியை மிகவும் நன்றாக படிப்பது. அதாவது தாய்மொழியில் கிறிஸ்தவத்தை அறிவித்தல் என்கிற பதத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.(இப்படி இந்த கொள்கையினால் தான் ஜி யு போப், கால்டுவெல் போன்றவர்கள் தமிழைப் படிக்கும்பொழுது தமிழ் மொழிக்கு அடிமைகளானார்கள்)
2. பண்பாடு போற்றி கிறிஸ்தவத்தை கொண்டு செல்வது. எந்த சூழ்நிலைகளிலும் அவர்களுடைய அடிப்படை பண்பாட்டை சிதைக்கக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.
3. அதன்பிறகு சமூக அமைப்பை ஒருபொழுதும் மாற்றக்கூடாது என்கிற விஷயத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
கிறிஸ்தவத்தை அவர்கள் இங்கு பரப்பிய பொழுது இங்கே உள்ளவர்கள் குடி அமைப்பில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். சில பண்பாட்டு விஷயத்திலும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் ரத்தத்தோடு கலந்து இருந்த இப்படிப்பட்ட விஷயங்களை ஆங்கிலிக்கன் சர்ச் போதகர்கள் கெடுத்து போட விரும்பவில்லை. அதனாலதான் சாதி போன்ற விஷயங்களுக்கு எதிராக அவர்கள் வாதத்தை வைக்காமல் சென்று விட்டார்கள். பிள்ளைமார் சர்ச் நாடார் சர்ச் என்று தென்னகத்தில் காணப்படுவதற்கு காரணம் இதுதான் எப்படியாவது அவர்கள் கிறிஸ்தவத்தை முதலில் ஏற்றுக் கொள்ளட்டும். அதைவிடுத்து இப்போதைக்கு பண்பாட்டு வரையறையில் மாற்றம் வந்துவிட வேண்டாம் என்பதற்காகவும் போதகர்கள் இப்படிப்பட்ட விஷயங்களை கைவிட்டு விட்டார்கள். அதனால்தான் பெரும்பாலான கிறிஸ்தவா்கள் கிறிஸ்தவ உபதேசத்தில் வளா்ந்து விட்டதாக சொல்லியும் சாதி பார்க்கிறார்கள்.
ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் பெயர் வைக்கும்போது கிறிஸ்தவ பெயரையும் தமிழ் பெயரையும் சேர்த்து வைத்து விடுவார்கள். உதாரணமாக, தேவஇரக்கம், கிறிஸ்து ஞானவள்ளுவன், ஜெயசீலி, தனசெல்வி, நிர்மலா இப்படி தமிழ் பெயர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது அப்படியில்லை அநேகமாக ஆங்கில மற்றும் எபிரேய பெயர்கள் விடுகின்றனா். என்னுடைய மகன்கள் பிறக்கும்பொழுது எனக்குக் கூட இந்த தெளிவு இல்லை. இருந்திருந்தால் தமிழ் பெயர்களைத்தான் சூட்டி இருப்பேன்.
எந்த சாதி அமைப்பு கிறிஸ்தவத்தில் இருக்கிறது என்று கவலைப்பட்டோமோ அதே குடி அமைப்பு முறைகள்தான் இன்று கிறிஸ்தவர்களை இந்து மக்களிடமிருந்து அன்னியப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று இஸ்லாமியர்கள் பண்பாடு சமூக வழக்கத்திலிருந்து பெரும்பாலும் தனிமைப்பட்டு போனார்கள் என்பது உண்மையிலும் உண்மை. இதற்குக் காரணம் அந்த குடி அமைப்பு சிதைந்து போன காரணத்தினால்தான்.
(புரிதலுக்காகவே சொல்கிறேன் உதாரணத்திற்காக மட்டும்). கிறிஸ்தவர்களில் பலா் பண்பாடு, சமூக அமைப்பு மாற்றப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததின் காரணம் இன்று சகோ.மோகன் சி லாசரஸ் மீது குற்றச்சாட்டுச்சட்டுகள் எழுந்தாலும், அவர் என்னுடைய சாதிக்காரன் என்று இந்துவாக இருப்பவா் கூட அவருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறாா். சகோ.டிஜிஎஸ் தினகரன் கிறிஸ்தவராக இருந்தாலும் அவர் எங்கள் சாதியை சேர்ந்தவர் என்பதில் பெருமைப்பட்டு அவருடைய புகைப்படம் சாதி அமைப்பு சங்கங்களில் இருக்கிறது என்பது உண்மை. இதுபோல பாஸ்டர்.ஜோசப் பாலச்சந்திரன் அவா்களை கொண்டாடுகின்றனா். (எல்லா சாதியினரும் தங்கள் சாதியை சோ்ந்தவா்களுக்கு சில முக்கியத்துவத்தை செய்கின்றனா்)
நான் கிறிஸ்தவத்தில் சாதி என்கிற அமைப்பை தூக்கி பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் பண்பாடு அமைப்பு என்பது குடி அமைப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன்.
குடி என்பது தொழிற் பெயராக இருந்தாலும், பிற்காலத்தில் அது சாதியாக நிலைபெற்று விட்டதினால், அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதற்கு இதுதான் காரணம். ஆனால் அவர்கள் இப்படி சாதி பார்ப்பதினால்தான் இந்த சமுக அமைப்போடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றாா்கள் என்பது உண்மையிலும் உண்மை என்பதயும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-நெல்லை ஜெயசீலனின் ஆய்வு கடிதத்திலிருந்து....
Comments
Post a Comment